கேள்வி: பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகு தனக்குப் பார்த்த மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

பதில்: வருங்காலக் கணவன் என்பவன் – திருமணம் ஆகும் வரை ஒரு அன்னிய மனிதனே! பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகும் கூட திருமணம் நின்று போய் விட வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிட இயலாது! எனவே ஒரு மனைவி கணவனுடன் பேசுவது போல், திருமணத்துக்கு முன்னர் இருவரும் பேசிக்கொள்ள அனுமதி இல்லை.

எனினும் – திருமணத்துக்கு முன்னர் மணப்பெண், தான் மணக்க இருக்கும் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி உண்டு.

ஒன்று: பெற்றோர் முடிவு செய்திடுவதற்கு முன்னரேயே, ஒரு பெண் அல்லது ஆண் – தான் திருமணம் செய்து கொள்ள இவர் பொறுத்தமானவர் தானா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், திருமணத்தின் வழியே இருவரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றியும் பேசிக் கொள்வதற்கு அவ்விருவருக்கும் அனுமதி உண்டு.

இரண்டு: அப்போதும் கூட அவ்விருவரும் தனிமையில் பேசிக் கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை இறையச்சம் உள்ள மணமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குடும்பத்தார்கள் முன்னிலையில் தான் அப்படிப்பட்ட உரையாடலுக்கு அனுமதி உண்டு.

மற்ற படி – திருமணம் தான் நிச்சயமாகி விட்டதே என்று – இருவரும் – தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வது, காதல் பேச்சுக்களில் ஈடுபடுவது, அன்பளிப்புகள் பரிமாறிக் கொள்வது – இவை எல்லாம் – அறியாமைக்காலப் பண்பாட்டு வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னொரு கருத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது. திருமணம் செய்வது என்று முடிவு செய்து விட்டால் திருமணத்தைச் செய்திட வேண்டியது தானே? ஏன் திருமணத்தை மாதக் கணக்கில் ஒத்திப் போட வேண்டும்? ஒரு சிலர் – ஆண்டுக் கணக்கில் கூட ஒத்திப் போடுகின்றனர்.

பேசி முடித்த பின்னர் – விரைவிலேயே – திருமணத்தை எளிமையாக முடித்துக் கொள்ளுங்கள். பிறகு யாரிடமும் எதற்கும் நீங்கள் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது!

 

No Comments

கேள்வி: என் இலட்சியம் நிறைவேறுகின்ற வரை திருமணத்தை ஒத்திப் போடலாமா? (ஒரு இளைஞி)

பதில்: திருமணத்தை ஒத்திப் போடத் தேவையில்லை. உங்கள் கணவரே உங்கள் இலட்சியத்துக்கும் துணை நிற்கலாம் அல்லவா?

ஆனால் திருமணத்துக்கு முன்னரே நீங்கள் மணம் செய்து கொள்ள விரும்புபவரிடம் உங்கள் இலட்சியம் குறித்து உங்கள் நிலை என்ன என்பதை பேசிக் கொள்வது நல்லது.

திருமணம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால், பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக உள ரீதியாகத் துன்பப்பட வேண்டியிருக்கும்.

புதிதாக திருமணம் முடித்த ஒரு பெண்மணியின் தாயார் சொன்னார்: “மகள் படிக்கிறாள்; எனவே படிப்பு முடிந்ததும் தான் திருமணம் என்று சொன்னோம். திருமணம் முடித்துக் கொண்டு படிப்பையும் தொடரட்டுமே என்று சொல்லி எங்களைத் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் திருமணம் முடிந்ததும் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.”

இப்படிப்பட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, திருமண ஒப்பந்தத்திலேயே மணமகளின் எதிர்பார்ப்புகளை எழுதி மணமகன் வீட்டாரின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு மணம் முடித்தல் நலம் என்கிறார் இஸ்லாமிய திருமண ஆலோசகர் ஒருவர்.

கணவனின் இலட்சியத்துக்கு மனைவி துணை நிற்பதும், மனைவியின் இலட்சியத்துக்கு கணவன் துணை நிற்பதும் தான் இனிக்கும் இல்லறத்தின் மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று ஆகும்.

No Comments

திருமணத்துக்கு முன் – வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

திருமணம் ஆகாத ஒரு இருபது மாணவிகளுக்கு திருமணத்துக்கு முன் – வழிகாட்டும் ஆலோசனை (Premarital Counselling) கடந்த 13 – 05 – 2012 அன்று வழங்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாணவிகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தந்தார்கள். அவற்றில் சில இதோ:

நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் பயன் உள்ளதாக இருந்தன. எங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்தீர்கள். எங்கள் வாழ்க்கையில் எதையும் யோசித்து செயல் படுத்தும் முறையை நீங்கள் சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அவை அனைத்தையும் கடைபிடிப்போம். – ஒரு மாணவி

இந்தப் பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லாரும் சொல்கிற மாதிரி தான் நீங்களும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் புது மாதிரியாக இருந்தது உங்கள் ஆலோசனை. – ஒரு மாணவி

எனக்கு கல்யாணம் அப்படின்னா ரொம்ப பயமா இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு அந்த பயம் போயிடுச்சு. – ஒரு மாணவி

இந்த தலைப்பை எப்படி இஸ்லாத்தோடு இணைத்து சொல்வீர்கள் (?) என்று நினைத்தேன். மாஷா அல்லாஹ்! நினைத்ததை விட அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். – ஒரு மாணவி

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தணும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள். – ஒரு மாணவி

இந்த வயதில் எங்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும், காதல் (love) பற்றியும், இந்த வயசில் நாங்கள் தவறு செய்யாமல் இருக்க அதற்கு அல்லாஹ் கூறியுள்ள வழிகளையும் சரியான நேரத்தில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி. – ஒரு மாணவி

இந்த தலைப்பில் நீங்கள் வெளிப்படையாக பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. – ஒரு மாணவி

இந்த வகுப்பில் நான் அதிகமான விஷயங்களை புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் முக்கியமான பகுதியை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய குழப்பமான கேள்விக்கு தீர்வு கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. யாரும் இதைப்பற்றி என்னிடம் சொன்னது இல்லை. முதன் முதலாக நீங்கள் நடத்தியது எனக்கு பயனாக இருந்தது. – ஒரு மாணவி

No Comments

17. படிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி?

எல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.

ஆனால் – நாம் நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பின்பு, சில காலம் கழித்து பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நம்மை அழைத்துச் சொல்வார்கள்:

“உங்கள் குழந்தைக்கு படிப்பு வரவில்லை!” சிறப்பு வகுப்புகள் எல்லாம் எடுத்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை!

எனவே – Your child is unfit for our school! – என்று சொல்லி TC கொடுத்து நம்மை அனுப்பி விடுவார்கள்!!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெற்றோர்கள் திகைத்து விடுகிறார்கள்.

படிப்பு வராத குழந்தை என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தைக்கு அடுத்து நாம் என்ன செய்திட வேண்டும் என்று புரியாதவர்களாக – வேறு சில பள்ளிக்கூடங்களை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு சேர்த்த சில காலத்துக்குப் பின் அதே அழைப்பு…. அதே விளக்கம்… அதே நீக்கம்…..

இக்கட்டுரை குறிப்பாக அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்காக எழுதப்படுகிறது.

ஒரு குழந்தைக்கு படிப்பு “வராமல் போவதற்கு” பலப்பல காரணிகள் உண்டு!

எனவே எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்பதைக் கண்டறியும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

படிப்பு வராமல் போவதற்கான காரணங்களில் சிலவற்றை கீழே தருகின்றோம்:

மகிழ்ச்சியான, குதூகலமான, பாதுகாப்பான சூழலில் தான் குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைக்கு “பாதுகாப்பற்ற” உணர்வு (insecure) இருந்தால் அக்குழந்தைக்கு படிப்பு வராதாம். Very strict ஆன பெற்றோர்களும், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களும் சற்று கவனிப்பார்களாக.

கவலை மற்றும் மனச்சோர்வுக்கு (depression) ஆளான குழந்தைகளுக்கு மண்டையில் எதுவுமே ஏறாதாம். மனச்சோர்வுக்குக் காரணம் கண்டு அதனை நீக்கினாலே – குழந்தை படிக்கத் துவங்கும். அதற்குத் தேவை குழந்தையின் மீது அக்கரை காட்டும் பெற்றோர்கள்.

பதற்றப்படும் (anxiety) குழந்தைகளும் கற்றுக் கொள்ளவியலாது. குழந்தைகளுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுத்தல் பெற்றோர் பெற்றோர் கடமை!

மனத் தூண்டலுக்கு (impulsivity)ஆளாகும் குழந்தைகளும் சரிவரக் கற்பதில்லையாம். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், தான் ஆசைப்படும் எந்த ஒன்றையும் உடனேயே அடைந்திடத் துடிக்கும் குழந்தைகள், செல்லம் கொடுக்கப் படும் குழந்தைகள் எல்லாம் இப்பிரிவில் அடங்குவர். கவனிக்க வேண்டியது பெற்றோர் கடமை!

திட்டப்படும் குழந்தைகள் படிப்பதேயில்லை! “உனக்குப் படிப்பே வராது!” என்றால் “தனக்குப் படிப்பே வராது!” என்று குழந்தை முடிவெடுத்து விடும்!

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் அவர்களை மக்குப் பிள்ளை என்று முத்திரை குத்தி விட வேண்டாம்!

இன்னொன்றையும் பெற்றோர்கள் கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தப் பள்ளியில் சேர்த்திருக்கின்றீர்களோ அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நம் குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் குழந்தைகளும் பாடங்களை ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை! குழந்தைகளின் “கற்கும் பாணிகளில்” (learning styles) பல விதங்கள் உண்டு. “காதால் கேட்டு கற்றுக் கொள்தல்” , கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்தல், எந்த ஒன்றையும் செய்து காட்டுவதன் மூலம் கற்றுக் கொள்தல் – என்பவை அவற்றுள் முக்கியமானவை. உங்கள் குழந்தைகளின் பள்ளியில் பாடங்கள் நடத்தப் படும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்வதும் நலம்.

1 Comment

16. குழந்தைகளின் மனத்தூண்டலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.

மனதூண்டலின் படி செயல் படும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இத்தகைய குழந்தைகள் பொறாமைப்படுவார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனக்கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் – கல்வியிலும் பின் தங்கி நிற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் – இவர்கள் வளர்ந்து ஆளானதும் – வன்முறையாளர்களாக மாறுவதற்குக் காரணமே மனக் கட்டுப்பாடு இல்லாமல் போனது தான் என்றும் ஆய்வாளர்கள் கணக்கெடுத்துச் சொல்கிறார்கள்.

மனக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவார்கள். இவர்களே வெற்றியாளர்கள்.

எனவே குழந்தைகளுக்கான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியினை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி தொடர்ந்திட வேண்டியது அவசியமான ஒன்று. இதில், பெற்றோருக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மனத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை துவக்கப் பள்ளியிலேயே வைத்து அளித்திட வேண்டும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள்.

மனத் தூண்டலைக் கட்டுப் படுத்திட வல்ல இறைவன் கற்றுத் தந்துள்ள வழிகள்:

இறைவனை சந்திப்போம் எனும் அச்சம்:

“எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.(79: 40 – 41)

எனவே – குழந்தைகளிடம் நாம் பேசும்போதே, அவர்களுக்கு, இறைவனை நாம் சந்திக்கப் போகிறோம் என்ற கருத்தினை ஆழமாக வேரூன்றச் செய்திட வேண்டும்.

ஐந்து வேளைத் தொழுகை:

ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களால் ஐவேளைத் தொழுகையை சரி வர நிறைவேற்றிட இயலாது.

மனோ இச்சையைப் பின் பற்றுபவர்கள் தொழுகையை வீணாக்கி விடுபவர்கள் என்றும் திருமறை எச்சரிக்கை செய்கிறது.

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.(19: 59)

ஏழு வயதிலிருந்தே நாம் குழந்தைகளைத் தொழுகைக்குப் பழக்கப் படுத்தக் கூடியவர்களாக விளங்கினால், குழந்தைகள் “கட்டுப்பாடு” (disciplined) மிக்கவர்களாக விளங்குவார்கள்.

எனினும் சில குழந்தைகள் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால் அடம் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

தொண்டையில் சதை வளர்ந்திருக்கும். மருத்துவர் ஐஸ் போன்ற குளிர் பொருட்களைக் கொடுத்திட வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்திருப்பார். ஆனால் குழந்தையோ, ” எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும், அதுவும் இப்போதே வேண்டும்” என்று அடம் பிடிக்கும். என்ன செய்வீர்கள்?

பெற்றோர் உறுதியுடன் நடந்து கொண்டிட வேண்டும். எப்போதெல்லாம் குழந்தைகள் இச்சைப்படி நடக்க முயற்சிக்கிறார்களோ – அப்போதே அதனைத் தடுத்திடுவதில் உறுதி காட்டிட வேண்டும்.

அத்தோடு மட்டுமல்ல. பெற்றோர்களும் மனத்தூண்டலுக்கு ஆளாகாதவர்களாக விளங்கிட வேண்டும். அதாவது இவ்விஷயத்திலும் பெற்றோர்கள் தாம் குழந்தைகளுக்கு முன்மாதிரி!

No Comments

15. மனச் சோர்வுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression.

இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope.

தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம்.

அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…

இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை!

நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” - அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)

நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!

கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை,

அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்;

வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை.

இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை.

மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல்.

மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை.

இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.

கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம்.

சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே.

ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.

சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும்.

அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?

குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:

ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.

ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!

இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.

கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!

இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது நமது பெரும் பொறுப்பு.

பெற்றவர்கள் குழந்தைகளுக்கு – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும்.

ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?

குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!

குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

ஒன்று:

மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.

இரண்டு:

போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

மூன்று:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!

குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!

No Comments

14. திட்டமிட்டுச் செயலாற்ற பயிற்சி கொடுங்கள்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்:

“உங்களில் மிகச் சிறந்தவர் எவர் எனில் – யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் மிகச் சிறந்த முறையில் (with perfection) செய்து முடிக்கின்றாரோ அவரே!” (அல் -பைஹகி – ஷுஅபுல் ஈமான்)

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் – திட்டமிட்டு செயல் படுவதில்லை. எல்லாமே அரைகுறை வேலைகள் தான். எந்த ஒரு மிகச் சிறிய ஒரு செயலாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய காரியமாக இருந்தாலும் சரி – ஒன்றை எப்படி துவங்குவது, எப்படி தொடர்வது, எப்படி அழகாக முடிப்பது – என்று நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது.

வீட்டில் – அது சமையலாக இருக்கட்டும், துணி துவைப்பதாக இருக்கட்டும், வீட்டைத் தூய்மைப் படுத்துவதாக இருக்கட்டும் – எல்லாமே அரைகுறை வேலைகள் தான்.

இங்கே நாம் சொல்ல வருவது நமது குழந்தைகளுக்கு திட்டமிட்டு செயலாற்ற எப்படி பயிற்சி அளிப்பது பற்றித்தான்.

இதனை ஆங்கிலத்தில் Good Work Habit என்கிறார்கள்.

அதாவது எந்த ஒன்றையும் சிறப்பாகச் செய்திடும் பழக்கம் என்று இதனைச் சொல்லலாம். இதனைக் கற்றுத் தருவதில் பெற்றோருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

அது என்ன? எப்படி?

Good work habit என்பது பின் வரும் 5 அம்சங்களையும் கொண்டது:

1. எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன்பு – அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து நம் முன் வைத்துக் கொள்தல்.

2. குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செயலைத் துவக்கி விடுதல்.

3. அந்தச் செயலைத் தொடர்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதனை அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடாமல் அதனைத் தொடர்தல் (persistence)

4. அந்தச் செயலைத் தொடர்வதற்கு நமக்கு மற்றவரின் உதவி தேவைப்படின், தயங்காமல் அந்த உதவியை நாடிப் பெற்றுக் கொள்தல்.

5. குறித்த நேரத்தில் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலையும் முடித்து விடுதல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட வீட்டுப் பணிகளில் இப்படிப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தால் – குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்கள் ஈடுபடுகின்ற எல்லாச் செயல் பாடுகளிலும் இந்த Good work habit அவர்களுக்குக் கை கொடுக்கும்.

சரி தானே?

No Comments

13. எப்படித் திருத்துவது குழந்தைகளை?

பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் – குழந்தைகளையும் மாணவர்களையும் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொன்னால் – பின்பு எப்படித் தான் அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறார்கள்.

குழந்தைகளை திட்டுவதனாலும் அடிப்பதனாலும் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைப் பற்றி நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.

இப்போது நமது அறிவுரைகளை மீறுகின்ற குழந்தைகளை எப்படி அடிக்காமலும் திட்டாமலும் திருத்துவது என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்களே. எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலவே இருக்க மாட்டார்கள், ஒன்று போலவே செயல் பட மாட்டார்கள்.

எனினும் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தான் இருப்பார்கள். ஒரு ஆய்வின் படி சுமார் 85% குழந்தைகள் இப்படிப்பட்டவர்கள் தானாம். இவர்களை compliant children என்று அழைக்கிறார்கள்,

ஆனால் மீதி சுமார் 15% குழந்தைகள் தான் எந்த அறிவுறுத்தல்களுக்கும் அப்படியே கட்டுப் படுவதில்லையாம். இவர்களை deviant children என்று அழைக்கிறார்கள்,

பள்ளிக் கூடங்களில் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்னைகள் இத்தகைய குழந்தைகளால் தான் ஏற்படுகின்றனவாம்.

இத்தகையவர்கள் பெற்றோர்களின் எந்த அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப் பட மாட்டார்கள். சட்டங்களை மீறுவார்கள். பெற்றோர்களுக்கு பெரும் சோதனையாக விளங்குவார்கள். எங்களுக்கு ஏன் இப்படி ஒரு பிள்ளை வந்து பிறந்துள்ளதோ என்று கூட பெற்றவர்கள் அங்கலாய்ப்பது உண்டு.

ஒன்றைச் செய்யாதே என்றால் அதனைச் செய்தே காட்டுவார்கள். ஒன்றைச் செய் என்றால் செய்யவே மாட்டார்கள்.

“வீட்டுக்குள் சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். பந்து விளையாடுவதாக இருந்தால் வெளியே போய் விளையாடுங்கள் என்பார் தாய். ஆனால் தாய் கொஞ்சம் அங்கே இங்கே போயிருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடத் தொடங்கி விடுவார்கள். கேட்டால் நாங்கள் குழந்தைகள் மீது படாமல் விளையாடுவோம் என்று சமாளிப்பார்கள். பொறுமை இழப்பார் தாய்! இத்தகைய குழந்தைகளை strong willed children என்றும் அழைக்கிறார்கள்.

இது போன்ற சூழல்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் விருப்பம் போல ஒவ்வொரு வழிமுறையைப் பின் பற்றுவார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் திட்டுவது, அடிப்பது என்று “கடினமாக தண்டிக்கும்” வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.

வேறு சில பெற்றோர்களோ – “குழந்தைகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள், அவர்களை அப்படியே விட்டு விட வேண்டியது தான்” – என்று விட்டு விடுவார்கள்!

இந்த இரண்டு வழி முறைகளுமே தவறு!

அப்படியானால் என்ன செய்வது?

பொதுவாக குழந்தைகளைத் திருத்துவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் செய்கின்ற தவறு ஒன்று இருக்கின்றது. அதாவது குழந்தைகள் என்ன செய்திட வேண்டும், என்னவெல்லாம் செய்திடக் கூடாது என்பதனை “வாய் மொழி” வழியே அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் verbal step என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த வாய்மொழி அறிவுறுத்தல் மட்டுமே இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் போதாது.

இன்னொரு படி நாம் மேலே செல்ல வேண்டும். அதற்குப் பெயர் தான் – “செயல் வழி அறிவுறுத்தல்”. அதாவது – Action step!

அது என்ன – செயல் வழி அறிவுறுத்தல் – என்கிறீர்களா?

மேலே சொல்லப் பட்ட அதே உதாரணத்துடன் விளக்குவோம்:

தாய் சொல்கிறார்; “வீட்டுக்குள்ளே பந்து விளையாடக் கூடாது. கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது.”

ஆனால் குழந்தையின் அண்ணன்மார்கள் இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே பந்தை எடுத்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள்.

தாய் இதனை கவனித்து விடுகிறார். “என்ன? நான் முன்பே சொல்லியிருக்கின்றேனே, வீட்டுக்குள் பந்து விளையாடக் கூடாது என்று; வெளியே போய் விளையாடுங்கள்; அடுத்த தடவை நீங்கள் உள்ளே பந்து விளையாடுவதைப் பார்த்தால் பந்தை எடுத்து உள்ளே வைத்து விடுவேன், சரிதானே?” என்று சொல்லி விட்டு நகர்கிறார். இது தான் வாய் மொழி அறிவுறுத்தல்.

ஆனால் அந்த பெரிய குழந்தைகள் இருவரும் மீண்டும் பந்தைப் போட்டு வீட்டுக்குள்ளேயே விளையாட்டைத் தொடர்கிறார்கள். சற்று நேரத்தில் தாய் அங்கு வந்து சேர்கிறார்.

உடனே அவர்கள் அருகில் சென்று அந்த பந்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு – இன்று உங்களுக்கு பந்து விளையாட்டு அவ்வளவு தான்; சொன்ன பேச்சைக் கேட்பீர்கள் என்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லி விட்டு பந்தை பத்திரமாக எடுத்து அலமாரியில் வைத்து மறக்காமல் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விடுகிறார். .
இது தான் செயல் வழி அறிவுறுத்தல்.

அதாவது தான் செய்த தவறுக்கான விளைவை இப்போது அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவ்வளவு தான்!

இது போன்று ஒவ்வொரு தடவையும் குழந்தைகள் கட்டுப் பாடுகளை மீறி நடக்கும் போதும் இதே வழி முறையைப் பின்பற்றினால் வீட்டுக்குள் கட்டுப்பாடு தானே வரும்.

தவறுகள் செய்கின்ற மனிதர்களைத் திருத்துவதற்கு இறைவன் கடை பிடிக்கும் நியதியும் இதுவே தான்!

பின் வரும் இறை வசனத்தை சற்று ஆழமாக நோக்குங்கள்:

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். ( அல் குர்ஆன் 30: 41)

சிந்தனைக்குரிய வசனம் தானே இது!

ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் இது போன்று குழந்தைகள் செய்கின்ற சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் இவ்வாறு “விளைவுகளை அனுபவிக்க வைத்திடும்” பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிடும் போது விளைவுகளைக் குறித்து அஞ்சி தவறுகளிலிருந்து பின் வாங்கிடும் மன நிலை ஒன்று – அவர்களின் மூளை நரம்புகளின் நுணுக்கமான பிணைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யப் படுகிறது,

பின்பு தவறு ஒன்றைச் செய்ய நினைக்கும்போது மூளை அவனுக்கு அதன் விளைவு குறித்து எச்சரிக்கத் துவங்கி விடும். பின்னர் தானாகவே இப்படிப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடுகளைக் கடை பிடிப்பவர்களாக மாறி விடுவார்கள்.

இதுவே இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழங்குகின்ற மிகப்பெரிய நன்கொடை (gift) ஆகும் என்றால் அது மிகையாகாது!

பெற்றோர்களே! தவறு செய்கின்ற குழந்தைகளிடம் நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்வோமா?

No Comments

12. மறைந்து கிடக்கின்றன மனித வளங்கள்!

“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் இன்னும் ஒரு பாடமும் உண்டு!

அது தங்கச் சுரங்கமோ அல்லது வெள்ளிச் சுரங்கமோ அல்லது பெட்ரோலியச் சுரங்கமோ – இவை அனைத்தும் மறைந்தே கிடக்கின்றன! அவை ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப் படுகின்றன! பின்னரே அங்கிருந்து அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுக்கப் படுகின்றன.

அது போலத் தான் மனித வளங்களும். நமது எல்லா வளங்களும் மறைந்தே கிடக்கின்றன. அதாவது – குழந்தையாக நாம் பிறக்கும் போது – உடலளவில் மிகவும் பலவீனமாகவும், அறிவைப் பொறுத்தவரை ஒன்றுமே அறியாத நிலையிலும் தான் பிறக்கின்றோம். என்னென்ன குணங்களுடன் நாம் பிறக்கின்றோம், என்னென்ன திறமைகள் நம்மிடம் ஒளிந்திருக்கின்றன – ஒன்றுமே நமக்குத் தெரியாது!

“உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

அப்படியானால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். எப்படி?

முதலில் பெற்றோர்களிடத்திலிருந்து தொடங்குவோம்.

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மகத்தான பொறுப்பு ஒன்று இருக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் என்னென்ன என்று நீங்களே கண்டு பிடிப்பது தான்!

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – அவர்களை நீங்கள் சற்றே உற்று கவனியுங்கள்! அவ்வளவு தான்! Obeserve your children!

இங்கே மூன்று சம்பவங்கள் உங்கள் சிந்தனைக்காகத் தரப் படுகின்றன:

ஒன்று:

நபி ஸல் அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அவர் சிறு வயதாக இருக்கும்போது, அண்ணலார் வீட்டில் இரவுத் தங்குவார்கள். அவர்களின் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களை அண்ணலார் மண முடித்திருந்தார்கள்.

ஒரு நாள் பின் இரவில் அண்ணலார் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த போது, சிறு நீர் தேவைக்காக சென்றார்கள். அப்போது வெளியில் உளூ செய்ய தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வைத்தது யார் என்று பார்த்த போது, சிறுவர் இப்னு அப்பாஸ் தான் எனத் தெரிய வந்தது.

இரவில் தான் கண் விழிப்பதை எதிர்பார்த்து, தமக்குத் தெரியாமல் பணிவிடை செய்வதைப் பார்த்த பெருமானார் மன மகிழ்வடைந்தார்கள். அதற்காக சிறுவர் இப்னு அப்பாஸை பாராட்டி, “அல்லாஹும்ம ஃபக்கிஹ்-ஹூ ஃபித்தீனி வ ‘அல்லிம்ஹுத் – தஃவீல் – யா அல்லாஹ்! இவருக்கு மார்க்க சட்ட விளக்கத்தைத் தருவாயாக! திருக் குர் ஆனின் விரிவுரையை இவருக்குக் கற்றுத் தருவாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டு:

நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அங்கு அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) என்ற சிறுவர் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அண்ணலார் பாராட்டினார்கள். “அல்லாஹும்ம பாரிக் லஹூ ஃபீ பை-இ-ஹீ!” – யா அல்லாஹ்! இவரின் வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள். (நூல்: அபூ தாவூத்)

மூன்று:

உமைர் (ரலி) என்ற சிறுவர் ஒரு குருவி வளர்த்து வந்தார். அவர் வீட்டு வழியாக அண்ணலார் செல்ல நேர்ந்தால், ” யா உமைர்! மா ஃபஅலன் நுஃகைர் – உமைரே! உனது சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று அக்கரையுடன் விசாரிப்பார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

ஒன்று: குழந்தைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சற்றே கவனியுங்கள்.

இரண்டு: அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களுக்காக துஆவும் செய்யுங்கள்.

மூன்று: அவர்கள் செய்யும் செயல் மிகச் சாதாரணமானது தானே என்று விட்டு விடாதீர்கள். அவற்றில் தான் உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் பொதிந்து கிடக்கின்றன!

ஒரு வேண்டுகோள்:

உங்கள் குழந்தைகள் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்வதை நீங்கள் கவனித்தால் – எமக்கு நீங்கள் எழுதலாம்.

No Comments

11. குழந்தைகளும் பள்ளிவாசல்களும்!

உங்கள் சிந்தனைக்கு இரண்டு நிகழ்ச்சிகள்!

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹசன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள்.

அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.

தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி வி;ட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை! (அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)

இன்னொரு நிகழ்ச்சி:

அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அமர்ந்து அளவளாவும் அவைக்கு, நபித்தோழர் ஒருவர் தம் குழந்தையையும் அழைத்து வருவார். அந்தக் குழந்தை நேரே நபியவர்களிடம் ஓடிச்சென்று அவர்களின் முதுகில் ஏறத் தொடங்கும். நபியவர்கள் அக்குழந்தையை தம் மடியில் அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் பின்னர் அக்குழந்தை இறந்து விட்டது! எனவே அக்குழந்தையின் தந்தை நபியவர்களின் அவைக்கு வர இயலவில்லை. இதைக் கவனித்த நபியவர்கள் எங்கே “அவரைக் காணோம்?” என்று கேட்டார்கள்.

நபித்தோழர்கள் அவருடைய குழந்தை இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்கள். பின்னர் அக் குழந்தையின் தந்தையை நபியவர்கள் சந்தித்து விசாரித்த போது, தமது குழந்தை இறந்து விட்ட விபரத்தைத் தெரிவித்தார் அந்த நபித்தோழர்.

அவருக்கு ஆறுதல் சொன்ன நபியவர்கள் அவரிடம் கேட்டார்கள்: தோழரே! எது உங்களுக்கு விருப்பமானது? உங்கள் மகன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பதையா அல்லது சுவர்க்கத்துக்கு நீங்கள் செல்லும் போது, எந்த வாசல் வழியாக நீங்கள் நுழைந்திட முற்பட்டாலும், உங்கள் மகன் அங்கெல்லாம் வந்து நின்று கொண்டு உங்களை வரவேற்பதற்காக அதன் கதவுகளைத் திறந்து விடக் காத்திருப்பதையா? அவர் சொன்னார்: யா ரசூலுல்லாஹ்!

என் மகன் எனக்கு முன்னேயே சுவர்க்கம் சென்று என்னை வரவேற்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு அது கிடைக்கும்! (அன் நசயீ )

இந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்தும் நாம் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. அதே நேரத்தில் இங்கே ஒரே ஒரு பாடத்தை மட்டும் நினைவூட்டுவோம். அதாவது நபியவர்கள் காலத்தில் குழந்தைகள் பள்ளிவாசலோடு இணைக்கப் பட்டிருந்தார்கள் என்பது தான் அந்தப் பாடம்.

இந்தப் ஒரே ஒரு பாடத்தை நாம் மறந்து போய் விட்டதன் பலனைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! புரிகின்றதா?

No Comments

Older Entries »